Tuesday, 11 August 2015

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd அவர்களுடன் ஓர் நேர் காணல்

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd அவர்களுடன் ஓர் நேர் காணல்

Vice Principal : Islamic University of Qatar

லங்கையின் கல்வித்துறைசார் இஸ்லாமிய அறிஞர்களில் குறித்துச் சொல்லத்தக்க ஒருவர் – கலாநிதி தீன்முகம்மத்! இவரின் சொந்த ஊர் அம்பாரை மாவத்திலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசம். இலங்கையில் வாழ்ந்ததை விடவும் – கற்கவும், கற்றுக் கொடுக்கவுமென இவர் வெளிநாடுகளில் வசித்த காலமே அதிகமாகும்!
இவர் – பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:
0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் – பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத் தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப் பணிப்பாளராகவும்
நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.
அதற்கு முன்னர், 1988 இல் – எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!
தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல் இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.
கலாநிதி தீன்முகம்மத் – பல இஸ்லாமிய நூல்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அரபு நாடுகள் பலவற்றிற்கும் அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கும் பயணித்துள்ள இவர் – பல்வேறு தலைப்புக்களில் அங்கு விரிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
தனது கலாநிதிப்பட்டதுக்காக இவர் எழுதிய – ‘இறை காதல்’ எனும் தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரையானது – இஸ்லாமிய உலகில் மிகவும் கவனத்துக்குரியது.
உலகளாவிய ரீதியில் இஸ்லாமியக் கல்வித்துறையிலே இத்தனை அடைவுகளையும், பதவிகளையும் பெற்றுள்ள தீன்முகம்மத் – அட்டாளைச்சேனையிலுள்ள – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பழைய மாணவராவார்! இவர் – தனது மௌலவிப் பட்டப்படிப்பை இங்குதான் பெற்றுக் கொண்டார்.
ஒரு குறுங்கால விடுமுறையில், குடும்பத்தோடு வந்துள்ள கலாநிதி தீன்முகம்மத்தை அவரின் வீட்டில் இந்தப் பேட்டிக்காகச் சந்தித்தோம்.
இத்தனை பதவிகளுக்கும், தகைமைகளுக்கும் உரித்தானவரா இவர்? என வியக்கும் வகையில் – எந்தவிதமான அலட்டல்களுமின்றி மிகச் சாதாரணமாக நம்மோடு உரையாடினார்!
கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமைக்கு காரணம் என்னவென்று கருதுகின்றீர்கள்?
பதில்: தமது பூர்வீகத்தின் முக்கியத்துவத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் உணராமைதான் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமைக்குப் பிரதானமான காரணமாகும்.
இங்குள்ள ஒருசிலர் இவ்வாறான ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென நினைத்தாலும், அதை மேற்கொள்வதற்கான வசதிகள் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்புக்களும் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளன.
அண்மைக் காலமாக சில அமைப்புக்களை வைத்துக் கொண்டு சிலர் இவ்வாறான ஆராய்ச்சிகளைச் செய்து வருவதாகக் கூறுகின்றார்கள். ஆனால், இவை – முஸ்லிம் சமூதாயம் பற்றிய பொதுவான ஆராய்ச்சியாக அமையவில்லை. சில தரப்புகளின் விருப்பு, வெறுப்புகளுக்கமைவாகவே இவை இடம்பெறுகின்றன.
இதேவேளை, பல்கலைக்கழகங்களிலும் தமது பட்டப்படிப்புக்காக மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வரலாறு, அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்பன போன்ற தலைப்புகளிளெல்லாம் அந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
இதேபோன்று, முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் தேசிய மீலாத் விழாக்களை நடத்துகின்றபோது, அந்த விழாக்கள் இடம்பெறும் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களின் வரலாறுகளையும் எழுதுகின்றனர்.
மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முஸ்லிம்களின் வரலாறு பற்றி எழுதியிருக்கின்றனர்.
ஆனால், இவை அனைத்துமே மீள – மீள ஒரே விடயத்தையே கூறிக்கொண்டிருக்கின்றன. அதாவது, எல்லோருக்கும் தெரிந்த தகவல்களையே இவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
அமெரிக்காவில் டெனில்ஸ் எனும் பெயரில் எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவர் கொலராடோ பல்கலைக்கழகத்தின் மனிதவியல் துறைப் பேராசிரியர். அவருக்கு இலங்கை முஸ்லிம் தொடர்பாக நிறைய ஈடுபாடு உள்ளது. அவருடைய கலாநிதிப்பட்டத்துக்காக எழுதிய ஆய்வுக்கட்டுரை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் பற்றியதாகும். 70 களின் ஆரம்பத்தில் அதை எழுதினார்.
தனது ஆய்வுக் கட்டுரையை எழுதியதிலிருந்து – இரண்டு மூன்று வருடங்களுக்கொருமுறை பேராசிரியர் டெனிஸ் இலங்கைக்கு வந்து செல்கின்றார். அவர் ஆய்வுக் கட்டுரை எழுதும் போது கிழக்கு முஸ்லிம்கள் இருந்த நிலைக்கும், அதன் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குமிடையிலான தகவல்களை அவர் தனது ஆராய்ச்சியில் புதிது, புதிதாகச் சேர்த்துக் கொள்வதற்காகவே இங்கு வருகிறார்.
இப்படி – இவர்களிடமுள்ள அறிவுக்கான தேடல், இலங்கை முஸ்லிம்களிடத்தில் இல்லை! அவ்வாறு ஒரு சிலர் இங்கு முயற்சி செய்தாலும், வெளிநாடுகளில் அறிவு ஆராய்ச்சிகளுக்காக நிதி வழங்கும் – பொது அமைப்புக்கள் போலானவை இங்கு மிக மிகக் குறைவு!
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக இங்கு எழுதப்பட்டுள்ள நூல்களில் – பல வரலாற்றுப் பிழைகள் காணப்படுகின்றன. அவைகளைக் கூட, மீளாய்வு செய்யத் தெரியாதவர்களாக இங்குள்ளவர்கள் இருக்கின்றார்கள்.
உதாரணமாக, கலாநிதி சுக்ரி எழுதியுள்ள ‘இலங்கை முஸ்லிம்கள்’ (Muslims of Sri lanka) நூலிலும் சில தகவல்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளன. அந்தப் பிழைகளை சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கலாநிதி சுக்ரியிடம் நான் சுட்டிக் காட்டியதோடு, அவைகளைத் திருத்துமாறும், அந்தத் திருத்தங்கள் குறித்து பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதுமாறும் வேண்டியிருந்தேன். ஆனால், இன்றுவரை கலாநிதி சுக்ரி அந்தப் பிழைகளைத் திருத்தவேயில்லை. நமது புத்திஜீவிகள்; கூட, எங்கள் வரலாறு தொடர்பில் இப்படித்தான் இருக்கின்றார்கள்!
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது – இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வு செய்வதற்கானதொரு நிலையமாகவும் இதைப் பயன்படுத்தலாம் என்கிற நம்பிக்கை பலரிடம் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியலும், கல்விக்கு அப்பாலான ஏனைய பல விடயங்களும் ஊடுருவியுள்ளதால் அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டுப் போயுள்ளது. இதனால், மேற்சொன்னவாறான ஆய்வுகளை அங்கு நடத்த முடியாமலுள்ளது!
எவ்வாறிருந்தபோதும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கை இன்னும் நம்மிடம் இருக்கவே செய்கிறது. அவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளப் பொருத்தமான பல்கலைக்கழகம் இதுதான். எனவே அதற்கான முயற்சிகளை தெ.கி.பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்!
கேள்வி: இஸ்லாமியக் கலாசாரம், அரேபியக் கலாசாரம், சோனகக் கலாசாரம் ஆகியவற்றில் – இலங்கை முஸ்லிம்கள் எதனூடாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகின்றீர்கள்?
பதில்: இது புதிதாகத் தோன்றியுள்ளதொரு பிரச்சினையென்று நான் நினைக்கின்றேன்! அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள்தான் இந்தக் கேள்வியை உருவாக்கியிருக்கின்றது.
நீங்கள் ஒரு இலங்கையர் என்றால், இலங்கையராகவே இருக்க வேண்டும். அதில் மாற்றங்களில்லை. அப்படியென்றால், நாம் இலங்கை முஸ்லிமாக அல்லது சோனகராகத்தான் வாழ வேண்டும். அற்குரிய கலாசாரங்களைத்தான் பின்பற்ற வேண்டும்.
ஆனால், நம்மில் சிலருக்கு – எது எந்தக் கலாசாரம் என்றே தெரியாது.
உதாரணமாக, இஸ்லாமியக் கலாசாரம் என்று நினைத்துக் கொண்டு, சில பெண்கள் தமது முகத்தையும், உடலையும் முழுவதுமாக மூடி ஆடை அணிகின்றார்கள். ஆனால், அது இஸ்லாமிய ஆடைக் கலாசாரமல்ல. அதேவேளை, அரேபியக் கலாசாரமுமல்ல. அது ஜாஹிலியாக் (இஸ்லாத்துக்கு முற்பட்ட அறிவிலிகளின்) கலாசாரமாகும்! பெண்ணுக்கு மரியாதை இல்லாத அந்தக் காலத்தில், அவர்களின் முகத்தை மறைத்து அப்போது மூடி வைத்திருந்தார்கள்.
ஆனால், துரதிஸ்டவசமாக முகத்தை மூடும் அந்த ஆடைக் கலாசாரத்தை – அரபிகளும், அரபிகளைப் பார்த்து ஏனைய நாட்டு முஸ்லிம்கள் சிலரும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமென்றுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, தலையை மூடி, நாகரீகமாக ஆடையணிய வேண்டும். ஆனால், முகத்தை மூடி ஆடை அணிய வேண்டுமென்று ஒரு பெண் விரும்பினால், அதற்கு இஸ்லாம் எதிர்ப்பானதல்ல!
எவ்வாறிருப்பினும், ஒருவர் – அவரது நாட்டின் கலாசாரத்தை பின்பற்றுவதே பொருத்தமானதாகும். நபிகள் நாயகம் இலங்கையில் பிறந்திருந்தால், அவர்கள் சாரம்தான் உடுத்திருப்பார்கள். ஆனால், இங்கு சில முஸ்லிம்கள் – அரேபியரின் ‘ஜுப்பா’ என்கிற ஆடை வகைகளை உடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். ‘ஜுப்பா’ என்பதை நம்மவர்கள் – இஸ்லாமிய ஆடைக் கலாசாரம் என்று பிழையாக விளங்கியும் வைத்துள்ளார்கள்.
ஆக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இலங்கை முஸ்லிம்களாகத்தான் இருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கான கலாசாரங்களினூடாகத்தான் நம்மை – நாம் அடையாளப்படுத்தவும் வேண்டும்.
கேள்வி: சில இஸ்லாமிய இயக்கங்கள் தமது எதிராளியைக் கொல்வதற்கான முறைமைகளிலொன்றாக – தற்கொலைத் தாக்குதலைக் கையாண்டு வருகின்றன. இஸ்லாம் இதை அங்கீகரிக்கின்றதா?
பதில்: பொதுவாகச் சொன்னால் தற்கொலைத் தாக்குதல்களுக்கு இஸ்லாத்தில் அங்கீகாரமில்லை!
ஆனால், யுத்தமொன்றின் போது, ஒரு தற்கொலைத் தாக்குதலின் மூலம்தான் தமது எதிரிகளைத் தாக்கி இலக்கை அடைய முடியும் என்று – முஸ்லிம்களின் தளபதி அல்லது தலைவரொருவர் தீர்மானிப்பாராயின் – அதன்போது, மேற்கொள்ளப்படும் தற்கொலைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளலாம்.
எதிரிகளை அழிப்பதற்கு வேறு வழிகளேயில்லை என்கின்றதொரு நிலையில்தான் – தற்கொலைத் தாக்குதல் பற்றிச் சிந்திக்க முடியும்.
ஆனால், இன்று நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களெல்லாம் மேற்சொன்ன முறையில் இடம்பெறுபவைகளல்ல! இவை மிகவும் பிழையானவை.
சில பேர் – குழுக்களாகச் சேர்ந்து கொண்டு, அவர்களாகவே தமக்குள் தீர்மானங்களை எடுத்து, தற்கொலைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் தவறானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! இது ஹராம் (விலக்கப்பட்டது), குப்ர் (இறை நிராகரிப்பு) ஆகும்!
குறிப்பிட்ட ஒரு நாட்டில் முஸ்லிம்கள் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அந்த நாட்டில் முஸ்லிம்களின் தலைவர் யாரோ, அவரின் ஆணையின் படியே அந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற வேண்டும். ஆனால், ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு குழுக்கள் உருவாகிக் கொண்டு இவ்வாறான தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது பெரும் பாவம். மட்டுல்லாமல், குறித்த தாக்குதலில் ஈடுபடுவோர் –  இறை நிராகரிப்போர்களாகவே மரணிப்பார்கள்.
நடைமுறை உலக அரசியலை வைத்தே மேற்படி சந்தர்ப்பங்களில் தற்கொலைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்றேனே தவிர, இஸ்லாம் தற்கொலைத் தாக்குதலை அங்கீகரிக்கவில்லை!
மேலும், உயிர் என்பது இஸ்லாத்தில் புனிதமானதொரு விடயமாக மதிக்கப்படுகிறது. உயிரை எடுக்கும் உரிமை அல்லாவுக்கு மட்டுமே உரித்தானது. தற்கொலை மட்டுமல்ல, இன்று பரவலாகப் பேசப்படுகின்ற கருணைக் கொலை கூட, இஸ்லாத்துக்கு விரோதமானதே!
கேள்வி: நமது குழந்தைகள் 10 வயதுக்குப் பின்னரும் தொழவில்லையென்றால் அவர்களை அடித்து தொழச் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால், சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டிப்பதை மிகவும் கடுமையாக எதிர்க்கின்றது இன்றைய சிறுவர் உரிமைக் கோட்பாடுகள்! அப்படியென்றால், நவீன சிறுவர் உரிமைக் கோட்பாடுகள் இஸ்லாத்துக்கு முரணானதா?
பதில்: இன்றுள்ள நவீன மனித உரிமைக் கோட்பாடுகள் அனைத்துமே இஸ்லாத்துக்கு முரணானவைதான்!
மனித உரிமைகளுக்காகப் பாடுபடுதல் என்பது நல்லதுதான். ஆனால், இன்றுள்ள மனித உரிமைக் கோட்பாடுகளின் பின்னணிகள் முழுக்க – இஸ்லாத்துக்கு மாற்றமானதாகவே உள்ளன.
மனித உரிமைகள் தொடர்பாக இஸ்லாத்தில் வேறொரு கருத்து நிலையிருக்கின்றது. அதாவது, இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் – மனிதன் என்பவன் அல்லாஹ்வுக்கு அடிமைமையானவன். அடிமைக்கு உரிமையில்லை. அடிமைக்கு அவனது எஜமானான அல்லாஹ் கொடுப்பது மட்டுமே உரிமையாகும். மனிதனுக்கு இயல்பில் எதன் மீதும் உரிமை கொண்டாட முடியாது.
எனவே, அல்லாஹ் மனிதனுக்கு எதையெதையெல்லாம் கொடுக்கின்றானோ, அவை மட்டுமே மனிதனுக்குள்ள உரிமையாகும்!
இதேவேளை, மனிதன் – அல்லாஹ்வின் பிரதிநியாகவும் இஸ்லாத்தில் மதிக்கப்படுகின்றான். அல்லாவுடைய நாட்டத்தையும், நோக்கத்தையும் இந்த உலகத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டவன்தான் மனிதன்!
அல்லாஹ்வின் பிரதிநிதியாக மனிதன் இயங்குவதென்றால் அவனுக்கு சில விடயங்கள் தேவையாக இருக்கின்றன. எனவே, தனது பிரதிநிதியாக இயங்குவதற்காக – மனிதனுக்கு சில அதிகாரங்களையும், உரிமைகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
ஆக, மனித உரிமைகள் என்பவை – மனிதனால், மனிதனுக்கு வழங்கப்படுபவைகளல்ல! மனிதனுக்கு இறைவன் (அல்லாஹ்) வழங்குகின்றவை!
மேற்குலகில் – மனிதன் மனிதனுக்கான உரிமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றான். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படாததொரு கோட்பாடாகும். ஏனென்றால், நமக்கு நாமே சொந்தமில்லை. நம்மைப் படைத்தவனென்று அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்.
மேற்கத்திய உலகில் – கடவுள் பற்றிய கோட்பாட்டுக்கும், பொதுமக்கள் வாழ்க்கைக்குமிடையில் தொடர்பில்லாத காரணத்தினால், இறைவனை (அல்லாஹ்வை) அவர்கள் அதற்குள் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ் கூறுவதுதான் உரிமை! 10 வயதாகியும் தொழாத பிள்ளைகளை அல்லாஹ் தண்டிக்கச் சொன்னால் தண்டிக்க வேண்டியதுதான்! கண்டித்தும், தன்டித்தும் வளர்க்கப்படாத பிள்ளைகள் ஒழுக்கமுடைய பிரஜைகளாக உருவாக மாட்டார்கள். இதற்கு மாற்றமானதொரு கருத்தை தற்போதைய சிறுவர் உரிமைகள் கோட்பாடானது முன்வைக்கின்றது. அது இஸ்லாத்துக்கு முரணானது என்பதில் சந்தேகமேயில்லை!
இன்று நாம் பேசித்திரியும் மனித உரிமைகள் எனும் கோட்பாடானது – இஸ்லாமியப் பார்வையில் மிகவும் பிழையானது!
இஸ்லாத்தில் மனித உரிமைகளைத் தீர்மானிப்பவை குர்ஆனும், ஹதீஸ்களும்தான்!
கேள்வி: உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட ஓர் உரியினம், இஸ்லாமிய முறையில் – ஆனால் இயந்திரம் மூலம் அறுக்கப்படுகிறது. இதை உண்ணலாமா? இது குறித்த இஸ்லாமிய விளக்கம் என்ன?
பதில்: அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுத்துச் சாப்பிடுமாறுதான் இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அறுக்கும் கருவி பற்றி எதுவும் சொல்லப்படவில்லை! எனவே, இயந்திரம் மூலம் அறுக்கப்படுவதென்பது ஒரு பிரச்சினையல்ல.
ஆனால், கத்தியால் அறுக்கப்படும் மாமிசத்துக்கும், இயந்திரத்தினால் அறுக்கப்படும் மாமிசத்துக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.
கத்தியால் நாம் அறுக்கின்ற விலங்கை – அறுத்து முடிந்ததும் கொஞ்ச நேரம் விட்டு விடுகின்றோம். பிறகு அறுக்கப்பட்ட விலங்கு துடிக்கும். அப்போது அதன் ரத்தம் முழுவதுமாக வெளியேறும். ஆனால், இயந்திரத்தினால் அறுக்கப்படும் விலங்குகளிலிருந்து இவ்வாறு ரத்தம் வெளியேறுவதில்லை.
எனவே, கத்தியால் அறுப்பதே நல்ல முறையாகும். அதற்காக – இயந்திரத்தினால் அறுக்கப்படும் விலங்குகள் ஹராம் என்று அர்த்தமல்ல. அவைகளையும் சாப்பிடலாம்!
அல்லாவுடைய பெயரைச் சொல்லி – குறித்த விலங்குகள் அறுக்கப்படுகின்றனவா என்பதுதான் முக்கியமானதாகும். அது பேணப்படல் வேண்டும்!
கேள்வி: இறை காதலுக்கும் – சூபித்துவத்துக்குமிடையிலான உறவு பற்றிப் பேசுங்களேன்! சூபித்துவம் என்பது – பௌத்த, கிரேக்க அல்லது கிறிஸ்தவ தத்துவங்களின் வெளிப்பாடு என்றும் ஒரு விமர்சனம் உள்ளதே?
பதில்: இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதற்காகத்தான் ‘இறை காதல்’ என்கிற தலைப்பில் எனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்தேன்.
சூபித்துவம் என்பதை கிரேக்க, பௌத்த அல்லது கிறிஸ்தவ தத்துவங்களின் வெளிப்பாடு என்று சொல்பவர்கள் எத்தனை கலாநிதிப் பட்டங்களை வைத்திருந்தாலும் பரவாயில்லை – அவர்களை முட்டாள்கள் என்றுதான் நான் கூறுவேன்.
கிரேக்க அல்லது பௌத்தம் போன்ற தத்துவங்களிலிருந்துதான் சூபித்துவம் உருவானதாகக் கூறுபவர்களில் அதிகமானோருக்கு அவர்கள் கூறுகின்ற தத்துவங்கள் பற்றியே தெரியாது.
இஸ்லாத்தின் அடிப்படையே இறை காதல்தான். இஸ்லாமிய வாழ்க்கை முறை இறை காதலின் அடிப்படையில்தான் அமைய வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது. இதை நடைமுறைப் படுத்துகின்றவர்கள் சூபிகள்! அதனால்தான் இறை காதலைப் பற்றி சூபிகள் அதிகமாகப் பேசுகின்றனர்.
மனிதனை ஒரு போதும் சட்டத்தால் மாற்றிவிட முடியாது. ஆனால், அன்பால் மாற்றி விடலாம். உதாரணமாக, விபச்சாரம் செய்தால் சவூதி போன்ற நாடுகளில் கசையடி வழங்குவார்கள் அல்லது கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஆனால், அங்குள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள். சவூதியிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று நிறையக் காசைச் செலவு செய்து தமது உடல் இச்சையை நிறைவு செய்து விட்டு – நாடு திரும்புகின்றார்கள். ஆக, சட்டத்தால் ஆட்களைத் திருத்த முடிகிறதா? இல்லை!
சட்டத்தில் எப்போதும் ஓட்டை இருக்கும். எனவே சட்டத்தை மேவி குற்றமிழைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் பலர் – அதைச் செய்து விடுகின்றனர்.
ஆனால், அன்பினால் ஒருவரை மாற்றி விட முடியும். ஏன் – அன்பிருந்தால் உங்களையே உங்களால் மாற்றி விட முடியும்!
ஒருவருடன் நீங்கள் காதல் நிலையிலிருந்தால், அவருக்காக எதையும் தியாகம் செய்வதற்கு நீங்கள் தயாராகவே இருப்பீர்களல்லவா! இறை காதலும் இப்படித்தான்!
அல்லாமா இக்பால் சொல்லியிருக்கின்றார் – காதல்தான் அல்லாவுடைய தூதன் என்று!
அல்லாஹ் மீதான காதல் உங்களிடம் இல்லையென்றால், இஸ்லாத்தை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றவே மாட்டீர்கள். ஆக – இறைகாதல் இல்லாத இடத்தில் இஸ்லாம் இல்லை!
இறைகாதலுக்கும் – சூபித்துவத்துக்குமிடையிலான உறவு இதுதான்!
மக்களிடம் இறைகாதல் இல்லாமல் போகும் நிலை வந்து விடுமோ என்பதற்காகத்தான் சூபிகள் வெளியாகி, மக்களின் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை காட்டி நிற்கின்றார்கள்.
ஆனால், சில மேற்குதேச சிந்தனையாளர்கள் சூபித்துவத்தை – வேறு தத்துவங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகச் சித்தரிக்க முயற்சி செய்கின்றார்கள்.
இஸ்லாம் என்பதை – கத்தியும், ரத்தமும், கொலைகளும் நிறைந்ததொரு மார்க்கமாகக்; காட்டுவதையே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அன்பையும், காதலையும் பற்றி இஸ்லாம் பேசுவதை அவர்களால் பொறுக்க முடியாது. ஆதனால்தான் சூபித்துவத்தை – கிறிஸ்தவத்திருந்தும் வேறு தத்துவங்களிலிருந்தும் பெறப்பட்டதொன்றாகச் சொல்கின்றார்கள்.
உண்மையாகச் சொன்னால், கிறிஸ்தவத்தில் இறைகாதல் என்பதே இல்லை! கிறிஸ்தவ ஞானிகள் இறைகாதலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததே கடந்த 800 ஆண்டுகளுக்குள்ளாகத்தான்!
அதாவது முஸ்லிம் சூபிகள் வெளியாகி 400 வருடங்களின் பின்புதான்  கிறிஸ்தவர்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன!
இவைகளையெல்லாம் – எனது கலாநிதிப்பட்டத்துக்கான ஆய்வில் மிகத் தெளிவாக விளக்கி, நிரூபித்துள்ளேன். மேலும், இது குறித்து விவாதிக்கவும் நான் தயாராக உள்ளேன்!
கேள்வி: இசைக்கு – இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள இடம் என்ன?
பதில்: இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இசையை ஹறாம் (விலக்கப்பட்டது) எனச் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், அந்தக் கருத்தை நான் முற்றாக எதிர்க்கிறேன். இசையென்பது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டதொரு விடயமாகும்!
இசைக்கருவிகள் சிலவற்றுக்கு எதிராக சில ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால், இசை கூடாது, அதைக் கேட்காதீர்கள் என்றெல்லாம் இஸ்லாத்தில் கூறப்படவேயில்லை.
இதேவேளை, இசைக்கருவிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்ற ஹதீஸ்கள் உறுதியானவைதானா என்பதையும் முதலில் நாம் ஆராய வேண்டியுள்ளது.
இப்னு கைஸ் சிரானி என்கிற இஸ்லாமிய அறிஞரொருவர் 05 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஹதீஸ் கலையில் பெரும் மேதையான இவர் – இசை பற்றி ‘கிதாபுஸ் ஸமா’ எனும் நூலொன்றை எழுதியிருந்தார். அந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது.
முதலாவது பகுதியில் – இசை கேட்பது கூடாது எனவும், இசையை நிராகரித்தும் வந்துள்ள ஹதீஸ்களையெல்லாம் தொகுத்து – அந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரத்துக்கு உதவாதவை என்று அவர் நிரூபித்திருந்தார்.
குறிப்பிட்ட நூலின் இரண்டாவது பகுதியில் – இசை கேட்க வேண்டும், இசைக் கருவிகளைப் பாவிக்கலாம் என்பதற்கு ஆதாரமாக வந்த சகல ஹதீஸ்களையும் ஒன்று திரட்டி – அவை உண்மையில் ஆதாரபூர்வமானவை என நிரூபித்துள்ளார்.
ஆக – இசையென்பது இஸ்லாத்தில் ஏற்கப்பட்டதொரு விடயம் என்பதை உறுதி செய்து கொள்ள இந்தப் புத்தகமே நமக்குப் போதுமானதாக இருக்கின்றது.
இசையில்லாமல் மனித வாழ்வே – இல்லை!
குர்ஆன் கூட – இசையோடும், ராகத்தோடும்தான் ஓதப்படுகின்றது. குர்ஆனின் அற்புதங்களில் அதன் இசைத் தன்மையும் ஒன்றாகும்!
குர்ஆன் வசனங்களிடையேயுள்ள ஓசை நயத்தின் அற்புதத் தன்மையில் மனதைப் பறிகொடுத்த பிரான்சின் இசை மேதையொருவர் – அதற்காகவே சில காலங்களுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது!
கேள்வி: இலங்கை முஸ்லிம்களுக்கான – தனித்துவ அரசியல் தேவை குறித்துப் பேசுங்களேன்?
பதில்: எந்தவொரு இனத்துக்கும் கலாசார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தனித்துவ அடையாளங்கள் இருப்பது நல்லதுதான்! ஆனால், அதற்குச் சில – முன் நிபந்தனைகள் உள்ளன. அரசியல் ரீதியாக முஸ்லிம்களாகிய நாம் தனித்துவ அடையாளத்தைத் தேடுவதற்கு முன்னர் – நமது சுயம் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் அடையாளம் தேவையென்றால், முதலில் முஸ்லிம்களின் அடையாளம் குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் அடையாளமொன்று தேவைப்படுகிறதென்றால், நம்மிடம் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். அதை நாம் அமுல்படுத்தவும் வேண்டும். அப்படியென்றால், நம்முடைய அந்த நிகழ்ச்சி நிரல்தான் என்ன?
நமது பிரச்சினைகள் என்னவென்று தெரியவரும் போதும், நமக்கான தேவைகள் என்ன என்று நம்மால் இனங்காணப்படும் போதும்தான் – நிகழ்ச்சி நிரல் என்பது தயாரிக்கப்படுகிறது.
ஆனால், நமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் பற்றியெல்லாம் நமக்கு இதுவரை ஒன்றுமே தெரியாது. உண்மையாகச் சொன்னால், நமக்கான நிகழ்ச்சி நிரல் என்னவென்றே நமக்குத் தெரியாது. அப்படியொன்று நம்மிடம் இருப்பதாகவும் தெரியவில்லை!
முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் அதிகரிப்பதுதான் நமது நோக்கமென்றால், முஸ்லிம்களுக்கென்று தனி அரசியல் கட்சியிருப்பதென்பது ஆதாயமானதுதான்!
ஆனால், பாராளுமன்றப் பிரதிநிதிகளை அதிகரிப்பதுதான் முஸ்லிம்களின் பிரச்சினையா? நமது பிரச்சினை அதுவல்ல!
எனவே, முஸ்லிம்கள் தமக்கான தனித்துவ அரசியல் அடையாளத்துக்கான தேவை பற்றி சிந்திப்பதற்கு முன்னர் – தமது சுயம் பற்றிய தேடலை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு தங்களுடைய தோற்றுவாய் எதுவென்று இன்னும் தெரியாது!
இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்தோ, யெமனிலிருந்தோ அல்லது மொரோக்கோவிலிருந்தோ வந்தவர்களல்லர். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதை நாம் முதலில் தேடி அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இந்த நாட்டில் முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினைகள் எவை என்பதையும் நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது.
நாம் யார் என்று தெரியாமலும், நமக்கு இருக்கும் பிரச்சினைகள் எவையென்று தெரியாமலும் – கட்சிகளையும், அமைப்புக்களையும் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். இதனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாமிய அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு வந்ததாய் சொல்லிக் கொள்பவர்களெல்லாம், இன்று ஒரு கட்சியிலும் – நாளை வேறோர் கட்சியிலும் இருக்கின்றார்கள்.
எனவே, இலங்கை முஸ்லிம்களின் சுயம் பற்றித் தெரிந்து கொண்ட பின்னர்தான், அவர்களுக்கான தனித்துவ அரசியல் அடையாளத்தின் தேவை குறித்த கேள்விகள் எழ வேண்டும்!
கேள்வி: முஸ்லிம்களின் தொன்மையையும், பூர்வீகத்தையும் நிறுவுவதற்குரிய ஏராளமான அடையாளங்களும், சான்றுகளும் பழைய பள்ளிவாசல்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இடநெருக்கடி காரணமாக இவைகளை உடைத்து விட்டு, அந்த இடங்களில் புதிய பள்ளிவாசல்களை இன்று கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில், முஸ்லிம்களின் பூர்வீக ஆதாரங்கள் இவ்வாறு அழிந்து போவதை எவ்வாறு காப்பாற்ற முடியும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்: பொதுவான பதிலொன்றை இதற்குச் சொல்லி விட முடியாது! ஓவ்வொரு நாட்டுக்கும், பிரதேசத்துக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இது விடயத்தில் இருக்கின்றன.
ஆனாலும் சவூதி அரேபியாவிலும், இலங்கையிலுமுள்ள முஸ்லிம்கள் தமது இஸ்லாமிய வரலாற்றுத் தடயங்களை அழிப்பதில் இன்று மிகவும் மும்முரமானவர்களாக இருக்கின்றார்கள்.
முகம்மது நபி வாழ்ந்த மக்காவிலும், மதீனாவிலும் – மனிதயியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவருக்கு – நபியவர்கள் அங்கு வாழ்ந்ததற்கான மனிதவரலாற்றுத் தடயங்கள் எதுவுமே கிடைக்காது! இலங்கையிலும் நிலை இதுதான். ஏராளமான இஸ்லாமிய வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
ரசனையில்லாமைதான் – நமது அடையாளங்களை இவ்வாறு நாம் அழிப்பதற்கு முக்கிய காரணமாகும்.
இன்று நம்மிடையே உள்ள பாமரர்கள் – கொங்றீட் மற்றும் மாபிள்களாலான கட்டிடங்களே அழகானவை என்று நினைத்து அதில் லயித்தும் விட்டார்கள். அதனால்தான் பழைய பள்ளிவாசல்களையெல்லாம் உடைத்து விட்டு – புதிது புதிதாய் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் பாமர மக்களை பிழை சொல்ல முடியாது. புத்திஜீவிகள் கூட, இவ்வாறுதான் யோசிக்கின்றார்கள்!
ரோமர்களும், கிரேக்கர்களும் தமது பண்டைய அடையாளங்களை இன்றும் வைத்திருக்கின்றார்கள். பிரமிட் இன்னும் இருக்கின்றதுதானே! அதேபோல் அல் அஸ்ஹர் பள்ளிவாசல் நூற்றுக்கணக்காக ஆண்டுகள் கடந்தும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றது. கெய்ரோவில் – அறுநூறு, எழுநூறு ஆண்டுகள் பழைமையான பள்ளிவாசல்களை இப்போதும் நாம் காணலாம்!
எனவே, இடநெருக்கடி காரணமாக பள்ளிவாசல்களை பெரிதாக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பழைய பள்ளிகளை அப்படியே வைத்துக் கொண்டு – அவைகளை விஸ்தரியுங்கள்.
கலை ரசனையுடையவர்கள் – தமது பழைய பூர்வீக அடையாளங்களை ஒருபோதும் சிதைக்கவே மாட்டார்கள்!
கேள்வி: மத நல்லிணக்கத்தினூடாக சமாதானம்’ என்கிற கருத்தியலொன்று – மிக வேகமாகவும், பரவலாகவும் இன்று முன்வைக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்தில் ‘மத நல்லிணக்கம்’ என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
பதில்: மத நல்லிணக்கம் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும்! பல மதங்களும், பன்மைக் கலாசாரங்களும் காணப்படுகின்ற இலங்கை போன்றதொரு நாட்டில் மத நல்லிணக்கத்தினூடாக சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதென்பது மிகவும் முக்கியமானது. சமூக ஒற்றுமைக்கும், நாட்டின் அமைதிக்கும் அது அவசியம்!
இந்தக் கோட்பாட்டினை வெற்றிபெறச் செய்வதென்றால் – உண்மையும், நேர்மையும் உள்ளவர்கள் இதில் ஈடுபடுதல் வேண்டும்.
இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தால், சர்வதேச நிறுவனங்களும், வேறு பல அமைப்புக்களும் பணம் தருகின்றன என்பதற்காகவே பலர் இதில் ஈடுபடுகின்றனர். இது வேறு விடயம்!
ஆனால், இஸ்லாத்தில் ‘மத நல்லிணக்கம்’ என்று ஒரு விடயம் இருக்கிறது. அதை இஸ்லாம் ஆதரிக்கவும் செய்கிறது.
ஒரு சமுதாயத்துக்கு மற்றைய சமுதாயம் பாதுகாப்பாகவும், ஒரு கலாசாரத்துக்கு மற்றைய கலாசாரம் பாதுகாப்பாகவும் இருந்து கொண்டு – புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை ஆகியவைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த ‘மத நல்லிணக்க’ கோட்பாடு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது!
உலக மயமாதலுக்குப் பின்னர் – இன்று எல்லா நாடுகளும் பல்லின மக்களைக் கொண்டவைகளாக மாறி விட்டன. இந்த நிலையில், ‘மத நல்லிணக்கம்’ என்கிற கோட்பாடு – முழு உலகுக்குமே இன்று அவசியமானதாக இருக்கின்றது. ஆனால், இதில் ஈடுபடுகின்றவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்!
கேள்வி: ஒரு முஸ்லிம் ஆத்மீகத்தில் பெற்றுக் கொள்ளும் எந்தவொரு முதிர்ச்சி நிலையின் போதாவது, இஸ்லாமிய அடிப்படைக் கடமைகள் ஏதாவதிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளனவா?
பதில்: இல்லை! சித்த சுவாதீனமற்றவர்களுக்கும், சிறுவர்களுக்குமே இஸ்லாமியக் கடமைகளிலிருந்து விடுபட்டிருப்பதற்கு அனுமதியுண்டு! சிலவேளை, ஆத்மீகத்தில் மிகவும் லயித்துப் போகின்றதொரு நிலையிலும், சிலர் தமது சுய புத்தியை இழந்து விடுவதுண்டு. இதை அரபியில் ‘மஜ்தூப்’ என்பார்கள். இதுகூட, சித்த சுவாதீனமற்றதொரு நிலைதான்.
முகம்மது நபியவர்களை விடவும் ஆத்திமீகத்தில் உச்ச நிலையை அடைய எவருக்கும் இயலாது! வொலி மார்களும், சூபிகளும் ஆசை கொள்வது – முகம்மது நபியவர்களின் ஆத்மீக நிலையை அடைவதற்ககாக அல்ல. நபியவர்களின் வழியில் முயன்று ஓரளவாயினும் பூரணத்துவம் பெறுவதுதான் அவர்களின் விருப்பம்!
முகம்மது நபி (ஸல்) அவர்களே – தொழுகை உள்ளிட்ட எந்தவொரு வணக்க முறைகளிலிருந்தும் கடைசிவரை விடுபடவேயில்லை எனும் போது – சாதாரண மனிதர்கள் எவ்வாறு தம்மை விடுவித்துக் கொள்ள முடியும்?
ஒரு முஸ்லிம் – சுய சிந்தனையும், புத்தியும், அறிவும் உள்ளவராக இருக்கும் வரையில், இஸ்லாமியக் கடமையினை விடுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவருக்கு அனுமதியில்லை! குர்ஆனிலோ, ஹதீஸிலோ அவ்வாறான அனுமதிகள் எவையும் வழங்கப்படவுமில்லை!!
கேள்வி: அரசியலில் பெண்களின் ஈடுபாட்டை இஸ்லாம் எந்தளவுக்கு அனுமதிக்கின்றது?
பதில்: சஹாபாக்களின் ஆரம்ப காலத்திலேயே பென்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். இரண்டு தரப்பினர்களுக்கிடையில் ஒரு யுத்தம் நடந்தபோது – அதில் ஒரு தரப்புக்கு நபிகளாரின் மனைவி ஆயிஷா நாயகி தலைமை வகித்திருந்தார்கள். அரசியல் ரீதியாகப் பெண்கள் தலைமை வகிப்பதற்கு இஸ்லாத்தில் எந்தவிதமான தடைகளுமில்லை.
பெண்களுக்கு வெளி உலக அறிவு ஏற்படாமல், அவர்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்த – இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பை வழங்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால், இப்போது அப்படியில்லை. பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி விட்டார்கள்.
பெண்கள் – அரசியலில் பங்களுப்புச் செய்வதற்கு எதிராக இஸ்லாத்தில் எதுவித கருத்துக்களும் இல்லை! அவர்களுக்கு அந்த உரிமை முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இஸ்லாமியக் கட்டுப்பாடுகளுக்கும், நடைமுறைகளுக்கும் உட்பட்ட நிலையில்தான் அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். அது முக்கியம்!
கேள்வி: அந்நிய கலாசாரத்தை (உதாரணமாக திருமணத்தின் போது தாலி கட்டுதல் போன்றவற்றை) முஸ்லிம்கள் உள்வாங்கிக் கொள்ளலாமா?
பதில்: அந்நிய கலாசாரங்களிலுள்ள எந்தவொரு நடைமுறையும் இஸ்லாத்துக்கு முரணாக இல்லையென்றால், அதை முஸ்லிம்கள் உள்வாங்கிக் கொள்வதில் எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை!
தாலி கட்டுவது இந்துக்களின் சடங்கு என்பதற்காக – அதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று ஒரு இஸ்லாமியன் நினைத்தால், விலகியிருக்கலாம். ஆனால், ஏதோவொரு வகையில் அந்தக் கலாசாரம் முஸ்லிம்களுக்குள் புகுந்து விட்டது. அதேவேளை, தாலி கட்டுதல் எனும் அந்நியக் கலாசாரமானது இஸ்லாத்துக்கு எந்தவொரு வகையிலும் முரணானதாகவும் இல்லை! எனவே, இதை நாம் பின்பற்றலாம். தவறில்லை!
இந்துக்கள் தாலி என்பதை மிகவும் புனிதமானதொரு அடையாளமாகக் கருதுகின்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறு பார்ப்பதில்லை! மேலும், தாலி கட்டுதல் – இஸ்லாமியச் சடங்கு அல்ல என்பதிலும் முஸ்லிம்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.
எவ்வாறிருந்த போதிலும், முஸ்லிம்கள் தனி அடையாளமுள்ள ஓர் இனம் என்கின்ற வகையில், தங்களுடைய கலாசாரங்களை மட்டும் அவர்கள் பின்பற்றுவதென்பதே சரியான முறையாகும்!
0
(இந்த நேர்காணலை 27 ஓகஸ்ட் 2009 ஆம் திகதிய வீரகேசரி வெளியீடான ‘விடிவெள்ளி’ பத்திரிகையிலும் காணலாம்)ஷ
நன்றி: மப்றூக்

Monday, 10 August 2015

மாமேதை மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி (Jalāl ad-Dīn Muḥammad Balkhī, பாரசீகம்: جلال‌الدین محمد بلخى) என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்று
ம் பரவலாக மௌலானா ரூமி(பாரசீகம்: مولانا) என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 - 17 திசம்பர் 1273) பாரசீக முஸ்லிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார்.

கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.

ரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன. துருக்கிய மற்றும் இண்டிக் மொழிகள் பெரிசியோ அரபிக் வரிவடிவத்தில் எழுதப்படுகின்றான. பாஸ்த்தோ, ஒட்டாமன், துருக்கி, சாகாடை மற்றும் சிந்தி மொழிகள் இதற்கு உதாரணம்.

சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பிராங்க்ளின் லூயிசின் ரூமியின் வாழ்க்கை வராலாற்றாய்வு நம்பகத்தன்மைமிக்கது. இவரின் கூற்றுப்படி பைசாந்திய பேரரசின் அல்லது கிழக்கு ரோமப் பேரரசிற்கு சொந்தமானது அனோடோலியன் குடாநாடு. இது வரலாற்றில் வெகு அண்மையில்தான் இஸ்லாமியர்களினால் வென்றெடுக்கப்பட்டது. இது துருக்கிய இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டபோதும் அரபியர்களும், பெர்சியர்கள், துருக்கியர்கள் இந்த நிலப்பரப்பை ரம் என்றே அழைத்து வந்தனர். எனவே அனோடோலியாவில் பிறந்த பல வரலாற்று பிரமுகர்களும் ரூமி என்கிற பெயரில் அழைக்கப்பட்டனர். ரூமி என்கிற வார்த்தை அரபி மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் ரோமன். இந்தத் தொடர்பில் நோக்கினால் ரோமன் என்பது பைசாந்திய பேரரசின் குடிமக்களை குறிக்கிறது அல்லது அநோடோலியாவில் வாழ்ந்தமக்களையும் அதனோடு தொடர்புடைய பொருட்களையும் குறிக்கிறது.

இக்காரணங்களால் இஸ்லாமிய நாடுகளில் பொதுவாய் ஜலாலுதீன் ரூமி என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. பெர்சிய வார்த்தையான மௌலவி என்றோ துருக்கிய வார்த்தையான மெவ்ல்வி என்றோ அழைக்கப்படுகிறார். இவ்வார்த்தை "இறைவனுடன் பணியாற்றுபவர்" என்கிற பொருளுடையது.

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்திலுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகம்மது என்பதாகும். ரூமி பாரசீக மண்ணை சார்ந்த, பாரசீக மொழி பேசும் பெற்றோர்களுக்கு பிறந்தவர். அவரின் தந்தையார் பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இஸ்லாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் வாக்ஸ் என்கிற சிறு கிராமத்தில் பிறந்திருக்கலாம். இது பெர்சிய நதியான வாக்ஸின் கரையில் அமைந்திருக்கிறது. (தற்போது தஜகிஸ்தான்) வாக்ஸ் பால்க் என்கிற பெரிய பகுதிக்கு சொந்தமானது. (இப்போது இதன் பகுதிகள் புதிய ஆப்கானிஸ்தானிலும், தஜகிஸ்தானிலும் உள்ளது). ரூமி பிறந்த ஆண்டு அவரது தந்தை பால்கில் ஒரு அறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.

பால்கின் பெரும் பகுதி அப்போது பெர்சிய கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக குரானிய சுபியிசம் வளர்ந்து வந்திருந்தது. உண்மையில் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்குபின் பெர்சிய கவிஞர்களான அட்டார் மற்றும் சானைக்கும் பெரும் பங்குண்டு.

மௌலானா அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது, மங்கோலிய கொள்ளைக்காரர்கள் அடிக்கடி கொரஸான் மாகாணத்தினுள் நுழைந்து நாசம் விளைவித்து வந்தனர். இதனால் பயந்த பல்கு நகரத்தின் குடிமக்கள் துருக்கியிலுள்ள 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறினார்கள். தமது தந்தையிடமே கல்வி கற்றுத் தெளிந்த அவர்கள், தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் பெரியார் ஸையிது புர்ஹானுத்தீன் முஹக்கீக் அவர்களிடம் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அப்பெரியாரிடமிருந்தே ஆத்மஞானத் தீட்சையும் கிடைக்கப் பெற்றார்கள். பெரியார் புர்ஹானுத்தீன் அவர்கள் இறையடி சேர்ந்ததும், 33 ஆம் வயதில் மௌலானா அவர்கள் தமது சீடர்களுக்குத் தீட்சை வழங்கிவந்தார்கள்.

இவ்விதமாக நான்கு ஆண்டுகள் கழிந்த சந்தர்ப்பத்தில் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற பெரியாரைச் சந்தித்தார். அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ரூமி, இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப் பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். இந்த ஷம்ஸுத் தப்ரேஸியை விளித்துப் பாடிய பாடல்கள்தான் "திவானே ஷம்ஸே - தப்ரேஜ்" என்ற நூலாகப் பெயர் பெற்றது. இந்த நூலில் சுமார் 2500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரை தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில் அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருப்பத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.

மௌலானா அவர்களுடைய ஆத்மஞான போதனைகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, எல்லோரும் வட்டமாக நிற்க பின்னணியில் புல்லங்குழல் இசை ஒலிக்க தெய்வநாம பூஜிப்பில் ஈடுபட்டு பரவசநிலையை எய்துவதை தம்முடைய ஆன்மீகப் போதனையில் புகுத்தினார். மௌலானா அவர்களுடைய பிரதான சீடராகவும், உற்ற தோழராகவும் விளங்கிய ஹுஸாமுதீன் ஹஸன் இப்னு அகீ துருக்கைப் பற்றி தன்னுடைய உபன்னியாசங்கள் அனைத்திலும் பாராட்டிப் பேசாமல் இருப்பதில்லை. மௌலானா அவர்கள் தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக "மஸ்னவி" யில் ஓரிடத்தில் "ஹுஸாம் நாமா" என்று இரண்டு பாடல்களுக்கு பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். "மஸ்னவி" நூலை தினமும் பாடல்களைச் சொல்லச்சொல்ல ஹுஸாமுத்தீன் அவர்கள் எழுதிவந்தார்கள். மொத்தம் ஆறு பாகங்களில் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள் / கி.பி. 1273 டிசம்பர் 16) காலமானார்கள். "மஸ்னவி" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், மஸ்னவி ஒரு பூரணமானதாகவே காணப்படுகின்றது.

A.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' புத்தகத்தில் " மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம், மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர். "

"கிதாபுல் மஸ்னவி" யிலிருந்து

25 வது பாடல்

காதலாலே பூதவுடல் விண்ணுலகு சென்றது. அதனால்தான் மலையும் ஆடத்தொடங்கி சுறுசுறுப்படைந்தது.

காதலனே, ஸீனா மலைக்கு உணர்ச்சியூட்டியது காதல். அதனால்தான் ஸீனா போதையுற்றது. மூஸா (அலை) (Moses) மயங்கி விழுந்தார்கள்.

என் இயல்புடன் இயைந்த ஒருத்தியுடன் நான் உதடு பொருத்த முடியுமாயின், நானும் புல்லங்குழலைப்போல் சொல்லக்கூடிய அனைத்தையும் சொல்லிவிடுவேன்.

தன் மொழியில் பேசும் ஒருவரிடமிருந்து பிரிக்கப்பட்ட எவனும், நூற்றுக்கணக்கில் பாடல்களைக் கற்றிருப்பினும் அவன் பாட இயலாத ஊமையேயாவான்.

ரோஜா மறைந்து, பூந்தோட்டத்தின் பசுமை மாண்டபின் புல்புல்லின் கதையை நீ கேட்க முடியாமல் போய்விடும்.

30 வது பாடல்

காதலியே யாவுமாவாள். காதலன் ஒரு திரையேயன்றி வேறல்ல. காதலிதான் ஜீவன். காதலன் உயிரற்ற ஜடமே.

காதலிக்கு அவன்மீது பற்றில்லாவிடின் அவன் சிறகில்லாத பறவைதான்; அந்தோ அவன் நிலை பரிதாபத்துக்குரியதன்றோ!

என் காதலியின் வெளிச்சம் எனக்கு முன்னாலும் பின்னாலும் இல்லாமல் இருக்கும் நிலையில் முன்-பின் பற்றிய தன்னுணர்வு எனக்கு இருப்பதெங்கனம்?

இந்த வார்த்தை வெளியாக்கப்படவேண்டும் என்று காதலின் சித்தத்தில் எண்ணமுண்டாகிவிட்டது. கண்ணாடி பிரதிபலிக்காவிடில் அது எப்படி கண்ணாடியாகும்?

ஆத்மாவின் கண்ணாடி எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதையும் நீ அறிவாயா? அதன் முகத்தின் மீதுள்ள துரு அகற்றப்பட்டதுதான் அதன் காரணம்.