Monday 2 January 2017

அரச ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம் - அமைச்சர் மத்தும பண்டார




2017 ஆம் வருட புத்தாண்டில் அரச உத்தியோகத்தர்களின் சேவைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 02 ஆம் திகதி காலையில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஊழியர்களின் பங்குபற்றலுடன் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ  அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லன்சா ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். 

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, "நாடு என்ற வகையில் நாங்கள் மிகவும் விமர்சனத்திற்குரிய காலத்திற்கு வந்துள்ளோம். இலங்கையர் என்ற இனத்தின் கீழ் கட்சி, நிற வேறுபாடுகளை மறந்து ஒரே நோக்கத்தை நோக்கிப் பயணிக்கிறோம். 2017 ஆம் ஆண்டிற்கான அரச சேவைக்கு உறுதிமொழி வழங்கும் போது ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் இந்த வருடம் வறுமையை ஒழிப்பதற்கான வருடமாக ஜனாதிபதி அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக அரசு என்ற வகையிலும், அரசியல்வாதிகள் என்ற வகையிலும் தீர்மானம் எடுப்போம். அதற்காகவே நாம் சென்ற மாதம் வரவு செலவுத்திட்டத்தினை தயாரித்து பாராளுமன்றில் சமர்ப்பித்தோம். அது வரலாறு காணாத வெற்றி பெற்றது. அணு அணுவாக அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்காக அரச ஊழியர்களான உங்களது ஒத்துழைப்பு அவசியமாகும். 

இங்கு கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் தங்களது சேவைகளை நாட்டுக்காக செய்வதை அரசாங்கம் என்ற வகையில் நாம் எதிர்பார்க்கிறோம். அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பைச் செய்த நாம் ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பளத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவையெல்லாம் நாம் செய்வது உற்பத்தித்திறன் மிக்க அரச சேவையை வழங்குவதற்காகும். அதற்காக நாங்கள் இவ்வருடம் பல வேலைத்திட்டங்களை உருவாக்கவுள்ளோம். சேவைக்காலத்திலே பணிபுரியும் ஊழியர்களை திறமை   மற்றும் வினைத்திறன் அடிப்படையில் இனங்காணும் செயற்திட்டமொன்றை நாங்கள் உருவாக்கவுள்ளோம். அத்துடன் அரச ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக அதிகமதிகமான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் நாம் ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம். மற்றும் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில்உள்ள அரச ஊழியர்களின் தரத்தினை நாம் இவ்வருடத்தினுள்ளே எமது ஊழியர்களும் அடைவதற்கான வேலைத்திட்டத்தினையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விஸ் ஆகியோருடன் இரு அமைச்சினதும் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர். 

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -