Monday, 28 January 2013

About Me

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுமா? தணிக்கை சபை விளக்கம்


இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர, இஸ்லாமிய மத குருமாரின் அறிக்கை கிடைத்தவுடன் மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திரைப்படம் இஸ்லாமிய மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களுக்கு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமது பிரதான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என நேற்றிரவு அறிவித்தது.

இது தொடர்பில் தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்துக்கள்,

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படுவதற்கு ஏதுவான காரணிகள் என்ன?

பதில்: இஸ்லாம் மதத்துக்கு எதிரான காட்சிகளைக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி அத்திரைப்படத்தினை தடை செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையில் வாழும் இனத்தவர்கள் என்ற வகையில் அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

அதன்பிரகாரம் திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி குறிப்பிட்ட அமைப்புகளுடனும் முஸ்லிம் தலைவர்களுடனும் பேச்சுவார்த்கைள் நடத்தினோம். இத்திரைப்படம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட ஏனைய அமைப்பினருக்கும் மத குருமாருக்கும் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.

கேள்வி: அதன்பின்னர் நீங்கள் எடுத்த தீர்மானம் என்ன?

பதில்: முஸ்லிம் மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் திரைப்படம் தொடர்பாக எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். அதன்பிரகாரம் இவ்வாரம் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆயினும் நேற்று திரைப்படத்தை பார்த்த பெரும்பாலானோரின் கருத்து திரைப்படத்தை திரையிடக் கூடாது என்பதாகத்தான் இருந்தது.

கேள்வி: விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்பதற்கு அந்த அமைப்புகள் கூறும் காரணம் என்ன?

பதில்: அவர்கள் இதுவரை எழுத்து மூலமாக எமக்கு அறிவிக்கவில்லை. எனினும் பேச்சுவார்த்தைகளின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இஸ்லாம் மதத்தவரை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாகவும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கேள்வி: இலங்கை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.

கேள்வி: இலங்கையில் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்குரிய அனுமதி வழங்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும் அதேவேளை, மதங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கருத்துக்களும் இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனின் உங்களுக்குரிய அதிகாரத்தின் நம்பகத்தன்மை இங்கு மீறப்படுவதாக இல்லையா?

பதில்: இலங்கையில் முஸ்லிம் மக்கள் வாழுகிறார்கள். இலங்கையர்கள் என்ற ரீதியில் அவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் தானே? அதனால்தான் அவர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். இஸ்லாமிய மதத் தலைவர்களின் பார்வையில் அந்தத்திரைப்படம் எவ்வாறிருக்கிறது என்பதை எழுத்து மூலமாகக் கோரியிருக்கிறோம்.

No comments:

Post a Comment